சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக கருதப்படும் நடிகரும் பாஜ ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக, பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் தனக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறுமாறு உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ஆரூத்ரா மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளார். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 8ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்