சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர்-அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அருந்ததியர் சமூகத்தினர் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம்? கலைஞர் ஆட்சியில் 2008 ஜனவரி 23ம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார்.
அருந்ததியர் சமூகத்தினருக்கு ஏற்றம் தரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியான அந்த ஆளுநர் உரையைத்தான் அன்றைய எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து, அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநர் உரையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, 2008 மார்ச் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அதில், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும், கே.பி.அன்பழகனும் கலந்து கொண்டார்கள். அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த நீதியரசர் ஜனார்த்தனத்தின் விரிவான அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்தது.
ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும், அந்த இடஒதுக்கீட்டின் செயலாக்கம் குறித்து அமைச்சரவைக் குழு ஆய்வு செய்வதென்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஜெயலலிதா வெகுண்டு எழுந்தார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சொல்லவில்லை. அதனை அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் சுட்டிக் காட்டி பேசும் போது, ’’அதிமுகவின் முடிவு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் ஒத்துப் போகக் கூடிய முடிவாகத்தான் இருக்கும்’’ என்றார். ஆனால், ஒத்துப் போகாத முடிவைத்தான் அன்றைக்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எடுத்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று, திமுகவைச் சீண்டி அறிக்கை விட்டிருக்கும் பழனிசாமி, எம்.ஜி.ஆர் மாளிகையில் இருக்கும் அம்மையார் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைகளின் கோப்புகளில் 2008 நவACம்பர் 29ம் தேதி அறிக்கையை எடுத்து கொஞ்சம் புரட்டி பாருங்கள். அருந்ததியினர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு கிடைப்பதை விரும்பாத ஜெயலலிதா, ‘’ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை’’ என்று அப்பட்டமாகப் பொய் சொன்னார்.
ஆனால், அதனை கலைஞர் அரசு சாதித்துக் காட்டி, அந்தச் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கியது. இந்த பின்னணியில் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம். ’தமிழக அரசு, 2009ம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது’ என அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தமிழக அரசு, திமுக அரசு எனச் சொல்ல எடப்பாடிக்கு என்ன தயக்கம்? ’அருந்ததியின மக்களை வஞ்சிக்கின்ற வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் திட்டமிட்டுத் தாக்கல் செய்யப்பட்டன’ எனக் கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
அதனை யார் தாக்கல் செய்திருப்பார்கள் என்பது அதிமுகவுக்கே நன்றாகத் தெரியும். ஏன் என்றால், ‘’ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை’’ என்று ஜெயலலிதா அடித்துச் சொன்னதற்குப் பின்னால்தான் அந்த வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. ‘அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற போது எனது அரசு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுத் திறம்படக் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதனால் தான் 2020ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதியரசர் அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்குச் சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு திமுக அரசு விதை போட்டு, அது வளர்ந்து பழமாகும் வரையில் எதிர்த்துவிட்டு, அந்த பழம் அருந்ததியர் சமூகத்தின் கையில் கிடைக்கப் போவது தெரிந்ததும், சொந்தம் கொண்டாட வந்துவிட்டார் பழனிசாமி. அதிமுக எடுத்த முட்டுகட்டைகள், முன்னெடுப்புகள் எல்லாம் வரலாற்றில் அழியாத பக்கங்கள். அதனை அந்தச் சமூக மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள். 2008 நவம்பர் 23ம் தேதி கலைஞர் எழுதிய கவிதையில், ‘..பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைக்க; பணி புரிவோம் தொடர்ந்து – பகுத்தறிவைத் துணை கொண்டு நடந்து’ எனக் குறிப்பிட்டார் அந்த பகுத்தறிவைத் துணைக் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றிருக்கிறோம். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்துவிட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்.