சென்னை: அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு உண்மையிலேயே பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்றிட கலைஞர் 2008ம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி ஆதிதிராவிட மக்களுக்குள், அருந்ததியின மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
அந்த முடிவின்படி, சட்டம் இயற்ற முனைந்தபோது கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அப்போது கலைஞர் அறிவுரைப்படி, தமிழ்நாடு அரசின் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக திகழ்ந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009ல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
உள் இடஒதுக்கீட்டினால் அருந்ததிய இளைஞர்கள் பெற்ற பயன்கள் 2009-2010ல் அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த 56 மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளிலும், 1,165 மாணவ மாணவிகள் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர். 2010-2011ல் இந்த எண்ணிக்கை மருத்துவ கல்லூரிகளில் 87 என்றும், பொறியியல் கல்லூரிகளில் 3,414 பேர், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் 779 பேர், கலைக்கல்லூரிகளில் 5,319 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 147 பேர், பள்ளிகளில் 42,269 பேர் என்று மொத்தம் 52,015 என அதிகரித்தது.
2009-2010ல் முதன்முதலாக அருந்ததியர்க்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டபின் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்த அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, முதல்வர் கலைஞர் ‘பெண் சிங்கம்’ திரைப்படத்திற்கு தாம் கதை வசனம் எழுதி, அதற்கு ஊதியமாக கிடைத்த 50 லட்ச ரூபாயையும், தம் சொந்த பணத்தில் இருந்து மேலும் 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை இந்த 1,221 பேருக்கும் தலா ரூ.5,000 வீதம் கல்வி வளர்ச்சி நிதியாக 5.12.2009 அன்று வழங்கினார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இடஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த வேளையில், 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஏற்கனவே 2004ம் ஆண்டிலேயே உள் இடஒதுக்கீட்டை அனுமதிக்க கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
அதன் காரணமாக, அருந்தியினருக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும், அருந்ததியினர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை 1.8.2024 அன்று வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பு பற்றிய விவரம் தம் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தமது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது. முறையாக குழு அமைத்து அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்து நிறைவேற்றி தந்தோம். இந்த சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டு பெருமிதம் அடைந்துள்ளார்.
மக்களை திசைதிருப்பும் நோக்கில் அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளித்து சட்டத்தை நிறைவேற்றிடும் பிறரை போல் அல்லாமல், திமுக அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளை பெற்று அரசாணையாகவோ, சட்டமாகவோ நிறைவேற்றி சாதாரண சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், திமுக அரசின் சட்டம் எப்போதும் வெற்றியையே பெற்று வருவது வரலாறு ஆகியுள்ளது.
இதற்கு திமுக அரசின் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்து நிறைவேற்றிய அருந்ததியினர் உள்இடஒதுக்கீடு சட்டம் மீதான உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது அளித்துள்ள தீர்ப்பு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் அரசின் ஓர் உன்னதமான திட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பது நினைவுகூரத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்திற்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது.