சென்னை: அருணாச்சலசேசுவரர் கோவிலின் தேர் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா கார்த்திகை தீபத்தை அடுத்து 7ம் நாள் தேர் திருவிழா நடக்கும். 40 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் தேர் பெரிய வீதியில் வழியாக வந்து திரும்பும்போது சாலை இறக்கமாக இருப்பதால் அதை இழுப்பவர்கள் தேரின் பின் சக்கரங்களை பிடித்து இழுத்து நிலை நிறுத்துவார்கள்.
பெரிய வீதி தார் சாலையாக இருப்பதால் தேரை நிலைநிறுத்துவது சரியாக இருக்கும். தற்போது அந்த சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கான்கிரீட் சாலையில் பிடிமானம் இருக்காது என்பதால், கடந்த மே மாதம் 5ம் தேதி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு அனுப்பியும், அதை கண்டுகொள்ளாமல், கான்கிரீட் சாலை அமைப்பதிலேயே ஆர்வம் காட்டப்படுகிறது. எவே, பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.