தூத்துக்குடி: ஆறுமுகநேரியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2.04 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போலீஸ் சப்-டிவிசன், ஆறுமுகநேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக்கு வடபுறம் உள்ள கோட்டைமலை காட்டுப்பகுதி, கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு டிஎஸ்பி பொன்னம்பலத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், எஸ்ஐ ஜீவமணி தர்மராஜ், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ஆறுமுகநேரி அருகே கொம்புத்துறை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு லாரி கொம்புத்துறை கடற்கரை பகுதியில் வந்து நின்றது. அதிலிருந்த டிரைவர் உள்பட 4 பேர் லாரியிலிருந்த மூடைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்த கியூ பிரிவு போலீசார், அந்த லாரியை நோக்கி விரைந்து சென்றனர். இதைப் பார்த்த அவர்கள் 4 பேரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து லாரியில் இருந்த மூடைகளை கியூ பிரிவு போலீசார் சோதனையிட்ட போது, அவை பீடி இலை மூடைகள் என்பது தெரியவந்தது. தலா 30 கிலோ எடை கொண்ட 68 பீடி இலை பண்டல்கள் என மொத்தம் 2040 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். லாரி மற்றும் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் நாளை (திங்கள்) சுங்கத்துறையிடம் ஒப்படைக்கின்றனர்.ஆறுமுகநேரி அருகே கொம்புத்துறை கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.