*சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் முழுவதும் முட்புதர்களால் மண்டிக்கிடக்கிறது. இதனால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவிகள் இசை, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடந்த நேஷனல் மாஸ்டர் அத்லட்டிக் சேம்பியன் ஷிப் போட்டியில் இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை பட்டு டால்மி 80 மீட்டர் மற்றும் 300 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கால்பந்து, ஓட்டப்பந்தயம், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும், அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
மைதானத்தை சுற்றிலும் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. மாணவிகள் விளையாடும்போது கீழே விழுந்தால் உடல் முழுவதும் நெருஞ்சி முட்கள் குத்திக் காயங்கள் ஏற்படுகிறது. சில இடங்களில் முட்செடிகள் மற்றும் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் விஷஜந்துகளும் நடமாடுகின்றன. இதனால் பள்ளி மாணவிகள் முழுமையாக விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
எனவே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் தடையின்றி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.