அண்ணாநகர்: அரும்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கமிஷனர் அருண், பணிகளை விரைந்துமுடிக்க கேட்டுக்கொண்டார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் பிரதான சாலையில் இன்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டு பெரிய பள்ளம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்தும் நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் 8வது மண்டல மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் வைத்தியலிங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முழுமையான ஆய்வுக்கு பிறகுதான் எப்படி பள்ளம் ஏற்பட்டது என்று தெரியவரும் என்று நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருந்த சென்னை காவல் ஆணையர் அருண் உடனடியாக காரைவிட்டு இறங்கிவந்து விசாரித்தார். பின்னர் அங்கு சாலையை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்து உடனே முடித்து மக்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என்று கமிஷனர் கேட்டுக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘’அரும்பாக்கம் பிரதான சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஜேசிபி மூலம் பெரிய பள்ளத்தை மூடினர். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்றனர். கடந்த சில வாரத்துக்கு முன் அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் சிக்னலில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார் சிக்கி சேதம் அடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகள் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரும்பாக்கத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.