சென்னை: தன்னை கடுமையாக விமர்சித்த பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். ராமதாசின் தீவிர ஆதரவாளரான அருளை அன்புமணி நீக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் பாமகவுக்கு தாங்களே தலைவர் என்று கூறிவருகின்றனர். இதனால் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவது, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதுவரை பாமக பொருளாளர், 80 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை மற்றும் மாநில நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி உள்ளார். இதில் பலரை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்படுவது அக்கட்சியினர் இடையே மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 25ம் தேதி ராமதாஸ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், ‘சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாவட்ட பாமக செயலாளருமான அருளை மாநில இணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பாமக கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அன்று மாலை அன்புமணி திடீரென ஒரு அறிவிப்பு ெவளியிட்டார். அதில், பாமக சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக சரவணனும், சேலம் மாநகர், மாவட்ட தலைவராக குமாரும் நியமிக்கப்படுகின்றனர். சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக இருந்த அருள், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்’ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அருள் எம்எல்ஏ, ‘என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை’ என தெரிவித்திருந்தார். இதற்கு மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த அருள் எம்எல்ஏ, அன்புமணியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அருள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இதுவரை ஆண்ட பல தலைவர்கள் எல்லாம், ராமதாஸ் பற்றி சொல்லாத வார்த்தைகளை, சொல்ல தயங்கிய வார்த்தைகளை அன்புமணி பேசியிருப்பது உச்சக்கட்ட மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தான் எங்களுக்கு முதல் தலைவர். அடுத்த தலைவர் தான் அன்புமணி. இதில் எந்த மாற்றமும் கிடையாது. நாங்கள் எல்லாம் ராமதாஸை பார்த்து தான் அரசியலுக்கு வந்தோம். இப்படி நாங்கள் உயிராக மதிக்கும் அவரை அன்புமணி விமர்சித்து பேசுவதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமதாஸை தைலாபுரத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று அழுத்தத்தை கொடுத்து அவரை அங்கேயே முடக்கிவிட்டீர்கள்.
மாவட்ட செயலாளர்கள் அன்புமணியின் பின்னால் இருக்கலாம், ஆனால் வாக்களிக்கும் மக்கள் ராமதாஸ் பின்னால்தான் இருக்கிறார்கள்.வாக்காளர்கள் இல்லாமல் நிர்வாகிகளை மட்டுமே வைத்து அன்புமணியால் என்ன செய்ய முடியும்? அன்புமணி தலைமையில் பா.ம.க., 15 ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. ராமதாஸை குழந்தை என கூறும் அன்புமணி, அவர் அளித்த தலைவர் பதவியை ஏன் பெற்று கொண்டார். இது மட்டும் செல்லுமா? ராமதாஸை இழிவுப்படுத்தி பேசினால் சும்மா இருக்க முடியாது’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தர்மபுரியில் நேற்று முன்தினம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், அன்புமணி இல்லையென்றால் இன்று அருள் கிடையாது. அன்புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்ளது? பாமக உட்கட்சி விவகாரம் சரியாகி விடக்கூடாது என்பதற்காக அருள் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். பாமகவை உடைக்க பார்க்கும் அருள், ஒரு அரசியல் வியாபாரி’ என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அருள் பேசியதற்கு 12 மணி நேரத்திற்குள் கட்சி தலைமையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அன்புமணி ஆதரவாளரான பாமக வக்கீல் பாலு தெரிவித்திருந்தார். ஆனால் அருள் இது குறித்து வாயே திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த அன்புமணி பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30ன் படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் (இன்று) புதன்கிழமை முதல் அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ராமதாசுக்கே அனைத்து அதிகாரம் அன்புமணி வீட்டு முன் தீக்குளிப்பேன்- எம்எல்ஏ அருள் ஆவேசம்
கட்சியில் இருந்து அன்புமணி நீக்கி உத்தரவிட்டுள்ளது குறித்து எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘பாமகவில் அதிகாரம் படைத்த தலைவர் ராமதாஸ் மட்டுமே, அன்புமணி செயல் தலைவர் தான். எனவே அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை. பாமகவில் முழு அதிகாரம் கொண்ட ராமதாசுக்கு மட்டுமே ஒருவரை நியமனம் செய்வதற்கும் அல்லது நீக்குவதற்கும் அதிகாரம் உள்ளது. ராமதாஸ் உள்ளவரை அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அன்புமணி தைலாபுரம் சென்று ராமதாசை நேரில் சந்தித்து பேசி ஒன்று சேர வேண்டும். அப்போது தான் கட்சி காப்பாற்றப்படும். இதற்காக நான் அன்புமணியின் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க கூட தயாராக இருக்கிறேன்,’’ என்றார்.
* இன்று வியாழக்கிழமை என்ன சொல்ல போகிறார் ராமதாஸ்
பாமகவை கைப்பற்ற தந்தை, மகன் இருவரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர். அன்புமணி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ள நிலையில், ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்குழு கூட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறார். மேலும் தினமும் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் ஒவ்வொரு பிரிவு நிர்வாகிகளையும் சந்திக்கிறார். அதன்படி நேற்று சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் பேரவை தலைவர் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டுக்கு அதிகளவில் தொண்டர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டுமெனவும், மேலும் இன்னும் 10 மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அனைத்து நிர்வாகிகளும் கட்சிப் பணியை தொய்வின்றி செய்யவும் பேரவை நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனிடையே ராமதாஸ் இன்று (3ம்தேதி) வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அருள் எம்எல்ஏ நீக்கம், தேர்தல் ஆணைய விவகாரம் தொடர்பாக அன்புமணிக்கு பதிலடி கொடுப்பார் என தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* பல மாவட்டங்களில் இரு அணிகளாக செயல்படும் பாமக
பாமகவில் தந்தை, மகன் இடையே மோதல் முற்றி இருதரப்பிலும் அடுத்தடுத்து நடந்த நீக்கம், நியமனங்களால் முன்னணி நிர்வாகிகள் இடையே பிளவு ஏற்பட்டது. தற்போது தீராத மோதலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களின் பகிரங்க குற்றச்சாட்டுகளால் அடிமட்ட தொண்டர்கள் வரை பிரிவை ஏற்படுத்தி உள்லது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் இருதரப்பும் போட்டி கூட்டங்களை நடத்தினர். இதேபோல் தர்மபுரி, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அடிமட்ட தொண்டர்கள் வரை இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
* ராமதாசை இயக்கும் அந்த 3 பேர்
தைலாபுரத்தில் சமூக நீதி பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் கோபு கூறுகையில், ‘நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வர வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் போராட்டம் நடைபெற உள்ளது. பாமகவை உருவாக்கியர் ராமதாஸ். அவருக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது. எனது தகுதி குறித்து அன்புமணி சந்தேகம் கொள்ள வேண்டாம். தேர்வு எழுதிதான் வழக்கறிஞராக வந்துள்ளேன். பார் கவுன்சிலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிர்வாகியாகவும் உள்ளேன். 19 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை நடத்தி வருகிறேன்’ என்றார். ராமதாசை 3 பேர் இயக்குவதாக அன்புமணி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘சிவன், விஷ்னு, பிரம்மா என்ற 3 பேர் இருப்பார்களோ என்பது தெரியவில்லை’ என்றார்.