திண்டிவனம்: பாமக கொறடா அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. சட்டமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் நிறுவன தலைவரான எனக்கு மட்டும்தான் இருக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவில் நடந்து வரும் அதிகார போட்டியால் தந்தை ராமதாசும், மகன் அன்புமணியும் இருவரும் மாறி மாறி குற்றசாட்டுகளை கூறி பொதுக்குழுவை கூட்டி கட்சியை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராமதாஸ் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. அவரை நீக்க வேண்டுமென்று சொன்னால் நிறுவன தலைவரான என்னால் மட்டுமே செய்ய முடியும். கட்சி எம்எல்ஏக்கள் 5 பேருக்கும் ஜி.கே.மணி தான் தலைவர். சாபாநாயகர் தான் சட்டமன்ற உறுப்பினரை நீக்கும் முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் அருள் சாதாரண சட்டமன்ற உறுப்பினர் அல்ல. கொறடாவாகிய அவரை நீக்குவது கடினம். சபாநாயகரிடம் சிபாரிசு செய்ய வேண்டும். சபாநாயகர்தான் நீக்க முடியும். அதனால் தான் அவரை நான் இங்கு வரசொன்னேன், அவரும் வந்துவிட்டார்.
உங்களை நேரடியாக பார்ப்பதற்கு மேலும் அவருக்கு இணை பொதுச் செயலாளராகவும், நிர்வாக குழு உறுப்பினராகவும் பொறுப்பு கொடுத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர், இணைப் பொதுச் செயலாளர், நிர்வாக குழு உறுப்பினர் என 3 பொறுப்புகளை அவர் கவனித்து வருகிறார். ஆகஸ்ட் 10ம்தேதி மகளிர் மாநாடு பூம்புகாரில் நடத்துகிறோம். இடங்களை பார்வையிட ஜூலை 10ம்தேதி நான் அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். இது மகளிர் மாநாடு என்பதால் மற்ற கட்சியைச் சேர்ந்த மகளிர்களும் கலந்து கொள்ளலாம். ஏழை மக்கள் ரயிலில்தான் பயணம் செய்கிறார்கள். எனவே ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
* அன்புமணி பற்றிய கேள்விகளுக்கு பதில் இல்லை
‘அன்புமணியின் டெல்லி பயணம் பற்றி கூறுங்கள்’ என்ற கேள்விக்கு, ‘யார் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகலாம். அது சம்பந்தமான கேள்விகளை கேட்க வேண்டாம்’ என்றும், ‘அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து’ என கேட்டதற்கு, ‘அவர் சம்பந்தமான கேள்விகளை தவிர்க்கவும். அதற்கு என்னிடம் பதில் இல்லை’ என்று ராமதாஸ் கூறினார்.
* கூட்டணி பற்றி தகவல் வதந்தி
‘திமுகவுடன் கூட்டணியா, இல்லை வேறு யாரோடு கூட்டணி?’ என்ற கேள்விக்கு, ‘பாமக நிர்வாக குழு அதன்பிறகு மாநில செயற்குழு, பொதுக்குழு இது மூன்றும் கூடி எந்த கட்சியோடு கூட்டணி என்று முடிவு செய்யும். அதன்பின் தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். அதற்கு முன்னே அதிமுகவா, திமுகவா என கேள்வி கேட்காதீர்கள். தற்போது கூட்டணி பற்றி தகவல் வதந்தி’ என்று ராமதாஸ் கூறினார்.
* நானே வழிநடத்துவேன்
‘கட்சியை வழி நடத்துவதற்கு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என 3 பேருக்கு அதிகாரம் உண்டு என கூறப்படுகிறதே?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த சர்ச்சைக்குள் நான் போகவில்லை. ஒற்றை மனிதன் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று பாமகவை வளர்த்தேன். இன்றும் நம் மக்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன். இதுபோன்று மனவேதனை கொடுக்கின்ற அளவு சில செய்திகள், சில செயல்கள் வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து நான் இந்த கட்சியை வழி நடத்துவேன்’ என்று ராமதாஸ் பதிலளித்தார்.
* தமிழக அரசுக்கு பாராட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘அரசு பள்ளிகளில் ஆங்கில திறனை வளர்க்க திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு ஆங்கில மொழி புலமையை வளர்த்தெடுக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை பாராட்டுகிறேன். அதேபோல் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தவும் அரசு ஆலோசிக்க வேண்டுகிறேன். விவசாயிகள் உரங்களை மொத்தமாக சேகரித்து தன்னகத்தே சிலர் ஒளித்து வைத்துக்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. உரத் தட்டுப்பாடு என்று சொல்லி உரங்களை முன்னரே வாங்கி குவிப்பது வேறொரு அபாயத்திற்கு வழிவகுக்கும். இப்படியான சூழல் உருவாகி இருப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
* ராமதாஸ் என் தலைவர் அன்புமணி சகோதரன் அருள் எம்எல்ஏ பல்டி
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த பின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘நெருக்கமான நண்பர்களான மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், வழக்கறிஞர் பாலு என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் கூறுவார்கள். ராமதாசும், அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம், விரைவில் இணைவார்கள். தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வருவார், வெற்றிக் கூட்டணியை உருவாக்கி தருவார். அன்புமணி என்னை தூக்கி வளர்த்தவர். அவர் என்னுடைய சகோதரன். எனக்கு 12 மணி நேரம் கெடு யாரும் கொடுக்கவில்லை. 24 மணி நேரமும் எனது செல்போனை அணைக்காமல்தான் வைத்திருப்பேன். யாரும் எதுவும் கூறவில்லை, அன்புமணியை நிச்சயமாக சந்திப்பேன்.
ராமதாஸ் சொல்வதை செய்வேன். அது தான் என் வேலை. இரட்டை நிலைப்பாடு கொண்டவன் நான் அல்ல. ராமதாசை விட்டுவிட்டு வேறு தலைவனை தேடினால் நான் இரட்டை வேடம் போடுபவன் என்று அர்த்தம். யாரை தலைவராக ஏற்றேனோ அவர் வழியில் உயிர் உள்ளவரை இருப்பேன். ராமதாசை தொடர்ந்து எனக்கு தலைவர் அன்புமணி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்போது கட்சியை விட்டு வெளியே போக அன்புமணி சொன்னாலும் தொண்டனாக செயல்படுவேன் என்றார். கடந்த சில தினங்களாக அன்புமணியை கடுமையாக விமர்சித்த அருள் எம்எல்ஏ, திடீரென அன்புமணி என் சகோதரன் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.