அருமனை: ஆறுகாணி அருகே வந்தபோது அரசு பஸ் டிரைவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. ஆறுகாணி பகுதியில் இருந்து இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு மார்த்தாண்டம் நோக்கி எண் 86 வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை சுந்தர் ராஜ் என்பவர் ஓட்டினார். பஸ்சில் சில பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் அரசு பஸ் பத்துகாணி சந்திப்பில் வந்தபோது திடீரென டிரைவர் சுந்தர் ராஜுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும் வியர்த்து படபடப்பாக ஏற்பட்டதால் சுந்தர் ராஜ் தொடர்ந்து அரசு பஸ்சை ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே மேற்கொண்டு பஸ்சை ஓட்டி சென்றால் விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த சுந்தர் ராஜ், அந்த பகுதியிலேயே சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளிடம் நிலைமையை எடுத்து கூறினார்.
இதையடுத்து பயணிகள் இறங்கி சென்றனர். இதையடுத்து சுந்தர் ராஜ் பஸ்சுக்குள்ளேயே ஓய்வெடுத்தார். சுமார் 6 மணியளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் சுந்தர் ராஜ் ஆறுகாணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது சுந்தர் ராஜின் முதுகு பகுதியில் சுளுக்கு போன்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர் கூறினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டதால் விபரீதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.