சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டுக்கு டிரேடிங் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆருத்ரா நிறுவன முக்கிய இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இருவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்ய, இன்டர்போல் எனும் சர்வதேச போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் குறித்து தகவல்களை சேகரிக்கவும், கைது செய்யவும், துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.