சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 முதல் 27ம் தேதி வரை நடந்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதி நடந்தது.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 4ம் தேதி தொடங்கியது 14ம் தேதி (நேற்று) நிறைவடைந்தது. சென்னையை பொறுத்தவரை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா சாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டது. மாநில கல்லூரியில் 72 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன.
இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் சேருவதற்கான 2வது கட்ட விண்ணப்ப பதிவும் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை முடிவுற்று முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 30ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.