சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மற்றும் மாணவியரது (சிறப்பு குழந்தைகள் உட்பட) கலைத்திறனை வெளிக்கொணரும்வகையில் ‘‘கலைத்திருவிழா’’ அரசால் நடத்தப்படுகிறது. அதன்படி, மூன்று பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பள்ளிநிலையில் தொடங்கி இரண்டாவதாக வட்டார அளவிலும், மூன்றாவதாக மாவட்ட அளவிலும் கடைசியாக மாநில அளவிலும் நடைபெற்று வருகிறது.
இதில், இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று மற்றும் நாளை பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த கலை நிகழ்ச்சியானது மாணவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி, அவர்களது குழு மனப்பான்மை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவி செய்தல், படைப்பாற்றல், பொறுப்புணர்வு, நேர மேலாண்மை, புதிய உத்திகளை கற்றல், தன்னம்பிக்கையுடன் செயல்படுதல் ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவதாகவும், மேலும் பள்ளிக்கு வருவதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்த மாணவர்களையும், மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் விதமாகவும் அமைகிறது.
அந்தவகையில், மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியினை சென்னை மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித்திட்ட அலுவலர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.