சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு , கே.என்.நேரு , எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 3 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கலைஞர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள சூழலில், இன்றைய உயர்நிலை செயல் திட்ட குழு ஆலோசனை கூட்டத்திலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். திருவாரூர் காட்டூரில் ஜூன் 20ம் தேதி கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். ஜூன் 3-ல் வடசென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். இணைய வசதியுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்கள் தொடங்க முடிவு செய்துள்ளனர்.