சென்னை: சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை கட்டிடத் திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு தேசிய முதன்மை துணைத் தலைவர், அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை ஆற்றுகிறார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் பல்வேறு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பா.சிவந்தி ஆதித்தனர் வளாகம் கட்டிடத்தை லெஜண்ட் குழுமம் தலைவர் லெஜண்ட் சரவணன் திறந்து வைக்கிறார், யோகரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீ கோகுலம் குழுமம் நிறுவனர்- தலைவர் கோகுலம் கோபாலன், சிட்டி யூனியன் வங்கி அரங்கத்தை சியூபி மேலாண்மை இயக்குநர், முதன்மை செயல் அதிகாரி காமகோடி, பேரமைப்பின் அலுவலகத்தை போத்தீஸ் குழுமம் நிர்வாக இயக்குநர் போத்தீஸ் எஸ்.ரமேஷ், பேரமைப்பின் பத்திரிக்கையாளர் அரங்கத்தை ஹட்சன் அக்ரோ புரோடெட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குநர் விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைக்கிறார். மேலும் பேரமைப்பின் சிறப்பு மலரை தினமலர் நாளிதழ் நிர்வாக இயக்குநர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட, தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.