காஞ்சிபுரம்: திருப்புக்குழி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி மற்றும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்தும் காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புக்குழி ஊராட்சியில் பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பணியாளர்கள் வீடுவீடாக சென்று சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தையும் பார்வையிட்டார். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, பள்ளியில் ரூ.93.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.