சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நிறைவடைந்தது. கூடுதலாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ..1000 வழங்கும் திட்டத்தை வரும் செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.7,000 கோடியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆக.4ம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆக.5ம் தேதி முதல் ஆக.16ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் இதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த இரண்டு கட்ட முகாம்களை சேர்த்து இதுவரை 1.54 கோடி பேர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பதிவு செய்யாதவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் கடந்த 18ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. அதன்படி, இதற்கு முன்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க தவறியவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்து கொண்டனர்.இந்நிலையில் கடைசி நாளான நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கென தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் கூட்டம் அலைமோதியது.
அதேபோல், விண்ணப்ப படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அந்தந்த முகாம் நடைபெறும் இடங்களிலேயே முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் கொடுத்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொண்டனர். முகாமில் பங்கேற்க வந்த குடும்ப தலைவிகளுக்கு ஆதார் எண்ணில் கைப்பேசி இணைப்பு, வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற விஷயங்களுக்காக விண்ணப்ப பதிவு செய்ய தவறியதால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இன்று முதல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன குறித்த விவரங்கள் குடும்ப தலைவிகள் அளித்த கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவல்களாக வரும்.