செங்கல்பட்டு: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைப்பெறும் இடங்களை கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூயிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கட்டங்களாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாம்கள் நடைபெறுகின்றன. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதிவரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நியாயவிலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை ரேஷன் கடை பணியாளர் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார்.
முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பு டோக்ளகன் வழங்கும் பணி துவங்கும். இதற்காக, பொதுமக்கள் கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடைகளில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியரிடம் விண்ணப்பத்தை பெற்ற குடும்ப தலைவிகள், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகாம் நடைபெறும் இடத்தில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். அச்சமயத்தில் சரிபார்ப்பு பணிக்காக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை குடும்ப தலைவிகள் எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித நகல்களையும் இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். விண்ணப்பப் பதிவு முகாமுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) பெறப்படும்.
ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு பயனாளி மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட நாளன்று விண்ணப்பப் பதிவு முகாமுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின், கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044- 2742 7412, 044- 2742 7414 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு வருவாய் வட்டத்தில் முதல் கட்டமாக வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதிவரை ஆத்தூர், வடகால், திம்மாவரம், காந்தளுர், மேலமையூர் (காமராஜர் நகர்), கரும்பாக்கம், ரெட்டிபாளையம், குருவன்மேடு, கொங்கனன்சேரி, கருநிலம், கரும்பூர், ராஜகுளிப்பேட்டை, வேண்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், தெள்ளிமேடு, கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், காயரம்பேடு, பழவேலி, வல்லம், ஆலப்பாக்கம் (பாரதபுரம்), திருவடிசூலம், மறைமலை நகராட்சி பகுதிகள், மதுராந்தகம் வருவாய் வட்டத்தில் விழுதமங்கலம், முன்னூத்திகுப்பம், கத்திரிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், மதுராந்தகம் நகராட்சி பகுதிகளிலும் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறுகின்றன.
செய்யூர் வட்டத்தில் செய்யூர், அம்மனூர், வீரபோகம், சிறுவங்குணம், புதுப்பட்டு, பாக்குவாஞ்சேரி, நெமந்தம், கீழச்சேரி, முதலியார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், திருப்போரூர் வருவாய் வட்டத்தில் கழனிப்பாக்கம், தையூர் அ.தையூர் ஆ.காயார், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர், முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடக்கின்றன.
பல்லாவரம் வருவாய் வட்டத்தில் கவுல்பஜார், மூவரசம்பட்டு, பொழிச்சலூர், திரிசூலம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் மண்டலப் பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, வண்டலூர் வட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகள், தாம்பரம் வருவாய் வட்டத்தில், புனித தோமையர்மலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் முதல் கட்ட விண்ணப்பப் பதிவுகள் நடக்கின்றன.
இதேபோல், திருக்கழுக்குன்றம் வட்டம், நெரும்பூர் குறுவட்டம், பொன்விளைந்த களத்தூர் குறுவட்டம், மாமல்லபுரம் குறுவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதிவரை அந்தந்த நியாயவிலை கடைகளில் முதல்கட்ட விண்ணப்பப் பதிவுகள் நடைபெறும். இதையடுத்து 2வது கட்டமாக, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதிவரை செங்கல்பட்டு வருவாய் வட்டத்தின் பிற பகுதிகள், செங்கல்பட்டு நகராட்சி பகுதிகள், மறைமலைநகர் நகராட்சி பகுதிகள், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் நகராட்சி பகுதிகள் உள்பட விடுபட்ட இடங்களில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.