திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விண்ணப்பம் பதிவு முகாமை கலெக்டர் ஆல்வி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். திருவள்ளூர் நகராட்சி, சிஎஸ்ஐ கௌடி தொடக்க பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமை, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் பிறகு பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விண்ணப்பங்கள் வாங்கும் இந்த முகாமை நேற்றுமுன்தினம் துவங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 629 நியாய விலை கடைகளில் முதற்கட்டமாக 4 லட்சத்து 221 குடும்ப அட்டைதாரர்கள் தான் விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், 1,125 தன்னார்வலர்களை நாம் தயார் செய்து, அதன் மூலம் 629 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாம் ஏற்கனவே எந்த நபர், எந்த முகாமுக்கு எந்த நேரத்தில் வர வேண்டும் என டோக்கன் வழங்கியதன் அடிப்படையில், அனைத்து முகாம்களிலும் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு எந்த இடையூறுமின்றி பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை கொடுத்து பதிவு செய்யும் நிகழ்வு அனைத்து முகாம்களிலும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் முகாமுக்கு வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் எந்த இடத்திலும் டோக்கன்கள் கொடுக்காத நபர்கள் வந்ததாகவோ அல்லது டோக்கன் கிடைக்கவில்லை என்றோ எந்தவித குற்றச்சாட்டுகளும் வரவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை மட்டும் 42 ஆயிரத்து 971 பேர் விண்ணப்பித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நகராட்சி வாரியாகவும் வட்டம் வாரியாகவும் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் விண்ணப்பிக்க வரும் வயதானவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய தெரியாமல் இருப்பவர்களுக்கும் முழுமையாக பூர்த்தி செய்யாமல் இருப்பவர்களுக்கும் உதவி செய்வதற்காக ஹெல்ப் டெஸ்க் இன்னும் உதவி செய்வதற்கான வசதியும் அதற்காக தன்னார்வலர்களும் இந்த 629 முகாம்களிலும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு பொறுப்பாளர் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பொது விநியோக திட்டம் ஆகிய அனைத்து துறைகளும் இதற்காக இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், 5 நியாய விலை கடைகளுக்கு ஒரு மண்டல அலுவலர் என்ற முறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது உதவி வட்டாட்சியர் நிலையிலான ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 15 முகாம்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற முறையில் உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட்டத்திற்குட்பட்ட பகுதிகள் உள்ள நியாய விலை கடைகளை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையிலான அலுவலரும், ஒவ்வொரு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த முகாம்களிலும் எந்தவித பிரசினைகளும் ஏற்படாமல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பொதுமக்கள் தங்களுக்கு வழங்கி உள்ள டோக்கன் அடிப்படையில் சரியான முகாமுக்கு சரியான இடத்திற்கு வந்து தங்களது விண்ணப்பங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதன் அடிப்படையில், எந்தவித பிரசனையும் இன்றி முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசினார். இதில் நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.