காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு கொள்கை திருவிழாவில் மதுராந்தகம் நகரில் கலைஞரின் உருவ சிலை, பேனா நினைவுச் சின்னம் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் கலைஞர் திடலில் ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் கிட்டு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மேலும் பல்லாயிரக்கணக்கான திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞன் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியொட்டி, பிரம்மாண்டமான முறையில் மேடைகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் தோரணங்கள் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன பொதுக்கூட்டம் மேடைக்கு செல்லும் பாதையில் வாழை மரங்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விழா நடைபெறும் பகுதி முழுவதும் கலைக்கட்டியுள்ளது. மேலும், மதுராந்தகம் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுக நகர அலுவலகம் வளாகத்தில் கலைஞரின் முழு அளவு வெண்கல சிலையும், அதேபோன்று பேனா நினைவு சின்னமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். திமுக நிர்வாகிகள் நகர செயலாளர் கே.குமார் ஒன்றிய செயலாளர்கள் சத்ய சாய், சிவக்குமார், தம்பு, ஏழுமலை, சிற்றரசு உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.