திருவாரூர்: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லுமாங்குடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 3 மாதங்கள் கடந்த நிலையிலும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கான அதிகாரம் குறித்தும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால வரம்பு குறித்தும் தெளிவாக தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆளுநரின் அணுகுமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதிமுக பாஜ சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாஜ தமிழ்நாட்டில் காலூன்றுவது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடியது.அவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் மோத விடுவது போல வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகைய ஒரு நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது. மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்ட தமிழ்நாட்டு மக்கள், அந்த கூட்டணியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.