சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த 100 ரூபாய் நாணயத்தை ரூ.10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் 100 ரூபாய் நாணயம் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என உரிய பணத்தை செலுத்தி வாங்கி சென்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொண்ட சென்னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் கூறுகையில், “கலைஞரின் தியாகமும், உழைப்பும் விலை மதிக்க முடியாதது. அவரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பெறுவதை பெருமையாக கருதுகிறேன். கலைஞரின் 100 ரூபாய் நாணயம் வாழ்நாள் முழுவதும் பேணி பாதுகாக்கின்ற ஒரு பெட்டகமாகும்” என்றார்.