Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 15 தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு: சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடு

* ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முக திறன் கொண்டவர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 15 தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு வழங்கியுள்ளது. படைப்பாளிகளை அவர் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்பு நிலைத் தமிழ்துறை இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலைஞர் குறித்த சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் நீங்கள் கருத்தரங்கு நடத்துவதே, ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முகத்திறன் பெற்றவர் கலைஞர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்று, கருத்துகளால் புது ஒளியுமிழ வந்திருக்கும் அனைத்து பேராசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் நன்றி. இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்கு கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. கலைஞர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு தனி இருக்கை இருக்க வேண்டும் என்று விரும்பி, அதைச் செயல்படுத்திக் காட்டினார். இலக்கிய உலகில் பரவலாக அறியப்படும் செய்திதான் என்றாலும், அதை இந்த இடத்தில் பதிவுசெய்ய வேண்டியது அவசியம். சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து கலைஞரின் பிறந்த நாளன்று, ‘கனவு இல்லம்’ என்று ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் இதுவரைக்கும் 15 அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றால், வீட்டின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். அதுவும், அந்த வீட்டிற்கான பத்திரச் செலவு முதலானவற்றையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்களுக்கும் கனவு இல்லம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இதுவரை 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் இதனை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒரே நோக்கம், படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 லட்சம் ரூபாயை வழங்கியது. அத்தகைய தலைவர் கலைஞரின் அடியொற்றி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இந்த நான்கு ஆண்டுகளில் 36 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, நூலுரிமைத் தொகையாக ரூ.4.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, தன்னையே தமிழ்நாட்டுக்கு ஒப்படைத்த கலைஞரின் அனைத்துப் படைப்புகளும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி, நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது. 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் - 15 புதினங்கள் - 20 நாடகங்கள் - 15 சிறுகதைகள் - 210 கவிதைகள் என்று படைத்தவர்.

இலக்கியத்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் திமுக உடன்பிறப்புகளுக்கு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் கரிகாலன் என்ற பெயரில் கேள்வி பதில் - தான் நடத்திய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஆறு பாகங்களாக எழுதிய நெஞ்சுக்கு நீதி என்று எழுதியதோடு - கலைஞரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கிறது. இதெல்லாம் மட்டுமே ஏறத்தாழ ஏழு லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

இது அத்தனையையும் ஒருவர் படித்து முடிக்க வேண்டும் என்றாலே, ஒரு ஆயுள் தேவைப்படும். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் “கலைஞர் போல் அத்தனை படைப்புகளை எழுத வேறொருவர் முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது\” என்று சொன்னார். அத்தகைய அறிவுப் புதையல்தான் கலைஞர். படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும். இதைத்தான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்த பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழிசோமு, துணை மேயர் மகேஷ்குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலாளர் சீனிவாச ராவ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.