சென்னை: சென்னையில் 1,428 நியாய விலை கடைகளிலும் முதல் 2 கட்டங்களிலும் விடுபட்ட பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பு முகாம்கள் நாளை முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள 1428 நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு 2 கட்டமாக உகாம்கள் நடைபெற்றன.
இதில் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 12,50,682 விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டதில் 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் பங்கேற்க இயலாத பெண்களுக்காக நாளை முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் முதல் 2 கட்ட முகாம்களில் பங்கேற்க இயலாத பெண்கள் மட்டும் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.