சென்னை: கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையில் அனைத்து சிற்றூர்களையும் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கத்தோடு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் உன்னத முயற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 4 ஆண்டுகளில் 10,187 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து 2025-26ம் ஆண்டில் மீதமுள்ள 2338 கிராம ஊராட்சிகளில் சுமார் 9.36 லட்சத்து உழவர்கள் பயனடையும் வகையில் ரூ.269 கோடியில் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை செயல்படுத்தும் விதமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை 2338 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி 2025-26ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை 2338 கிராம ஊராட்சிகளில் ரூ.267.159 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் காய்கறி சாகுபடி, பழச்செடி தொகுப்புகள் வழங்குதல், தென்னங்கன்று விநியோகம், நிலநீர் ஆய்வு, கிணறு அமைத்தல், பம்பு செட்டுகள், பண்ணை குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.