பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் எழுந்த முறைகேடு புகார் எதிரொலியாக உதவி இயக்குநர்(தணிக்கை) வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 540 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு தளம் போட்ட வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வில் அதிகாரிகள் இடைதரகர்களை வைத்துக் கொண்டு முறைகேடு செய்துள்ளதாக தொடர் புகார்கள் எழுந்தது. ஒன்றியத்தில் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தகுதியற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வீடு கட்ட பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகுதியான பயனாளிகள் முதலமைச்சர் தனி பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்திருந்தனர்.
பொதுமக்களின் புகார் தொடர்பாக கடந்த 1ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் தினகன் செய்தி எதிரொலியாக மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்(தணிக்கை) ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் வைத்துக் கொண்டு பயனாளிகள் தேர்வில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கட்டுமான வீடுகள் அளவு தரம் குறித்து ஆய்வு செய்து விவரங்கள் சேகரித்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் முறைகேடு தொடர்பான புகார் எதிரொலியாக ஆய்வு நடந்து வருவதால் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.