சென்னை: சென்னையில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம்- சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஆற்றிய உரை;
சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் -சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழிசோமு, துணை மேயர் மகேஷ்குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாதெமி செயலாளர் முனைவர் சீனிவாச ராவ், நம்முடைய பெருமதிப்பிற்குரிய கவிப்பேரரசு வைரமுத்து, வருகை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, தமிழ் ஆர்வலர்களே, அரசு உயர் அலுவலர்களே, என் பேரன்பிற்குரிய மாணவச் செல்வங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
சாகித்ய அகாதெமியும் J.N.U-வின் சிறப்புநிலைத் தமிழ்த்துறையும் நடத்தும் இந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்து, அதேநேரத்தில் சிறப்பு மலரை வெளியிடும் வாய்ப்பை பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கு தலைவர் கலைஞரின் மகனாக மட்டுமல்ல – தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பெருமித உணர்வோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்! காலம் சற்றே கடந்திருந்தாலும், இந்த கருத்தரங்கை சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!
கவிதை – புனைகதை – செவ்வியல் – நாடகம் – திரை வசனம் – உரைநடை ஆகிய தலைப்புகளில் நீங்கள் கருத்தரங்கு நடத்துவதே, ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முகத்திறன் பெற்றவர் நம்முடைய தலைவர் கலைஞர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், இந்த கருத்தரங்கில் பங்கேற்று, கருத்துகளால் புது ஒளியுமிழ வந்திருக்கும் அனைத்து பேராசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
தலைவர் கலைஞரின் மேடை உரைகள் இலக்கியத்தின் மறுமுகம்! தலைவர் கலைஞரின் சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம்! அவர் நடத்திய விவாதங்கள், அழகான – ஆழமான கருத்து மோதல்கள்! தன்னுடைய வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் அவர்! அவர் நடத்திய போராட்டங்களும் பெற்ற வெற்றிகளும் இந்தியச் சமூகத்தை உணர நினைக்கும் எல்லோருக்குமான படிப்பினைகளாக அமைந்திருக்கிறது!
தென்றலைத் தீண்டியதில்லை; ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று அனுபவ பூர்வமாக சொன்னார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! அவரின் வாழ்வையே தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக – மேம்பாட்டுக்காக அர்ப்பணித்த காரணத்தால்தான் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக – ஐம்பது ஆண்டுகள் தமிழர்களுக்கான இயக்கத்திற்கு தலைவராக அவரால் இருக்க முடிந்தது! தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் கோலோச்சிய தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இலக்கியத்தைதான் இளைப்பாறும் நிழலாக கருதினார்! அதனால்தான் “எனது செங்கோலை யாரும் பறித்து விடலாம்; ஆனால், எனது எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது” என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!
இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாதெமி செய்து வருகிறது. ஒருவரின் இலக்கியத் தகுதி என்பதற்கு சாகித்திய அகாதெமிதான் அளவுகோல் எனும் அளவுக்கு புகழோடு செயல்பட்டு வருகிறது! எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்திய அகாதெமியின் பணி மகத்தானது! போற்றுதலுக்குரியது! அவர்கள் கலைஞரின் நூற்றாண்டு விழாவை J.N.U-வுடன் இணைந்து இங்கு கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது!
இந்தியாவில் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் J.N.U-வுக்கு என்று, தனி குணம் உண்டு! கருத்தாழமிக்க உரையாடல்களுக்கு இடமாக உள்ள J.N.U-வில் வெளிவரும் ஆய்வுகள், உலக அளவில் பேசப்படுகிறது! அதனால்தான் உலக அளவிலான பல்வேறு பல்கலைக்கழகங்கள் J.N.U-வோடு இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. அதனால்தான், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் J.N.U-வில் தமிழுக்கு ஒரு தனி இருக்கை இருக்க வேண்டும் என்று விரும்பி, அதைச் செயல்படுத்திக் காட்டினார்!
15 ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வகையில் ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்க 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் வழங்கினோம். J.N.U-வோடு பன்னோக்கு கலையரங்கத்திற்கு அருகே உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகித்ய அகாதெமியும், J.N.U-வும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது.
இந்த நேரத்தில் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன்… இலக்கிய உலகில் பரவலாக அறியப்படும் செய்திதான் என்றாலும், அதை இந்த இடத்தில் பதிவுசெய்ய வேண்டியது அவசியம் என்பதால் சொல்கிறேன்… சாகித்திய அகாதெமி விருது பெறும் படைப்பாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளன்று, ‘கனவு இல்லம்’ என்று ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன்.
இந்த திட்டத்தில் இதுவரைக்கும் 15 அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கனவு இல்லம் வழங்கி இருக்கிறது! பரிசுத்தொகை ஒரு இலட்சம் என்றால், வீட்டின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்! அதுவும், அந்த வீட்டிற்கான பத்திரச் செலவு முதலானவற்றையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்களுக்கும் கனவு இல்லம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இதுவரை 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் இதனை நாம் செயல்படுத்தி இருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரே நோக்கம், படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான்! எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்! இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மக்களின் உயர்வுக்காக அவர்களின் சமூக விடுதலைக்காக முற்போக்குச் சிந்தனைக்காக இயங்கிய – இயங்கும் எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் உச்சி மோந்து கொண்டாட தவறியதே இல்லை! அந்த வழியில்தான் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழ் இலக்கியவாதியாக இருந்து, சிறப்பான படைப்புகளைக் கொடுத்தது மட்டுமல்லாமல் சிறப்பான படைப்பாளிகள் அனைவரையும் அங்கீகரித்தார்! அரவணைச்சார்! அதுதான் அவரது தனிச் சிறப்பு!
இலக்கியவாதிகளுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் செய்த ஏராளமான பணிகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஒன்றுதான். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாயை வழங்கியது! அத்தகைய தலைவர் கலைஞரின் அடியொற்றி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இந்த நான்கு ஆண்டுகளில் 36 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, நூலுரிமைத் தொகையாக 4 கோடியே 25 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது!
அதுமட்டுமல்ல, தன்னையே தமிழ்நாட்டுக்கு ஒப்படைத்த தலைவர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகளும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி, நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது! 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் – 15 புதினங்கள் – 20 நாடகங்கள் – 15 சிறுகதைகள் – 210 கவிதைகள் என்று படைத்தவர் அவர்!
இலக்கியத்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் கழக உடன்பிறப்புகளுக்கு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் கரிகாலன் என்ற பெயரில் கேள்வி பதில் – தான் நடத்திய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்கள் – தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஆறு பாகங்களாக எழுதிய நெஞ்சுக்கு நீதி என்று எழுதியதோடு – கலைஞரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கிறது. இதெல்லாம் மட்டுமே ஏறத்தாழ ஏழு இலட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்! இது அத்தனையையும் ஒருவர் படித்து முடிக்க வேண்டும் என்றாலே, ஒரு ஆயுள் தேவைப்படும்!
கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் “கலைஞர் போல் அத்தனை படைப்புகளை எழுத வேறொருவர் முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது” என்று சொன்னார்! அத்தகைய அறிவுப் புதையல்தான் தலைவர் கலைஞர்! கலைஞர் ஆட்சி என்பது, தமிழாட்சி! அதனால்தான், தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்து, செம்மொழி மாநாட்டையும் உலகம் பாராட்டும் வகையில் நடத்தி காட்டினார்! அவரின் வழித்தடத்தில், நம்முடைய திராவிட மாடல் அரசும் – மொழிக்காக வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி, தமிழாட்சியை நடத்தி வருகிறோம்!
“தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும்” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். அத்தகைய தலைவரான முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த் தொண்டினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க இந்த கருத்தரங்கம் பயன்படவேண்டும்! கலைஞரின் புகழ்பாடுவதாக மட்டுமல்லாமல், கலைஞர் உருவாக்க விரும்பிய சமத்துவ எண்ணமும் – முற்போக்குச் சிந்தனையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்படவேண்டும்!
தமிழ்ச் சமூகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து தங்களின் படைப்பை எழுதி வழங்க வேண்டும்! சிறந்த படைப்புகளை இதுபோன்ற அமைப்புகள் பாராட்ட வேண்டும்! படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும்! இதைத்தான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது! சாகித்ய அகாதெமி போன்ற அமைப்புகளும் இந்தப் பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.