சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. அதன்டி, தென் சென்னை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பல்வேறு அரசு துறைகளுடன் ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், வருகிற 13ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
14ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மேற்கு சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோடு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 20ம் தேதி ஆலந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 21ம் தேதி சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. இம்மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இதில், பல்வேறு அரசுதுறைகள் பங்கேற்க உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை இருப்பின் அதன் நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகிய ஆவணங்களுடன், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.