பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம், திருவிக நகர் தெற்கு பகுதி திமுக சார்பில், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை ஓட்டேரி, 5 விளக்கு பகுதியில் சுயாட்சி கற்றுத் தந்தவர், சுயமரியதை பெற்றுத் தந்தவர் எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா, வீரமணி, சசிகுமார், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதாவை அனுப்பிய மறுநாளே குடியரசு தலைவர் அனுமதி வழங்கி கையெழுத்திடுகிறார். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்படுகிறது. பாஜ அல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் வஞ்சிக்கின்றனர். அப்படியெனில் சட்டமன்றத்துக்கு என்ன அதிகாரம்? இதை நாங்கள் பொது பிரச்னையாக பார்க்கிறோம். இதற்காக திமுகவுக்கு உடன்நிற்கிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வருக்கு கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. புதிய கல்வி கொள்கையை அனைவரும் ஏற்கவேண்டும். இல்லையெனில் நிதியை கொடுக்க முடியாது என்கின்றனர். இதை ஏற்கமாட்டோம் என்கிறார் நம் முதல்வர். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்பார்கள். நாங்கள் சத்தியமாக சொல்கிறோம், எங்களுக்கு நிரந்தர எதிரி பாஜதான். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிதான் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
பின்னர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: ஒரு கட்சியை நடத்தும் நானே திமுகவினரை வியந்து பார்க்கிறேன். அந்தளவுக்கு சிறப்பாக செயலாற்றுகின்றனர். அவர்கள் கட்சியை உயிர்ப்போடு வைத்துள்ளனர். கலைஞரின் கருத்தியல் வாரிசு மு.க.ஸ்டாலின். அவர் கலைஞரின் பிள்ளை என்பதைவிட கருத்தியலை உள்வாங்கியுள்ளார். அதனால்தான் எத்தனை கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையில் கையெழுத்திடமாட்டேன் என்கிறார். மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவ-மாணவியருக்கு மாதந்தோறும் உதவித்தொகைகளை வழங்குகிறார். இதுதான் முதல்வர் ஸ்டாலினின் கெத்து. இதுதான் கலைஞரின் கருத்தியல். எங்களின் கூட்டணிக்கு கலைஞர் வைத்த பெயர், மதச்சார்பற்ற கூட்டணி. அதனால்தான் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும், திமுக கூட்டணியில் உள்ள நாங்கள் அனைவரும் மதச்சார்பின்மையை உயர்த்தி பிடிப்போம்.
சீட் அதிகம் கேட்பீர்களா என கேட்டால், ஆம், அதிக சீட் வேண்டும் என்று கேட்போம். ஆனால், அதிக சீட்டுக்காக மதச்சார்பற்ற கூட்டணியை முறிப்போமா? திமுக கூட்டணியினர் கொள்கை முதிர்ச்சி கொண்டவர்கள். இது, தமிழர்களை பாதுகாக்க போராடும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி நமதே. இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி பேசினார்.