ராஞ்சி: அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் ராகுலுக்கு எதிரான பிடிவாரண்டிற்கு ஐகோர்ட் தடை விதித்த நிலையில், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, அப்போதைய பாஜக தேசியத் தலைவரான அமித் ஷாவை சாடும் வகையில், ‘பாஜகவில் ஒரு கொலையாளி தேசியத் தலைவராக வர முடியும், ஆனால் காங்கிரஸில் அது நடக்காது’ என்று ராகுல் காந்தி பேசியதாக, பாஜக மூத்த தலைவர் பிரதாப் குமார் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்கண்டின் சாய்பாசா நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்டை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி ராகுல் காந்தி சாய்பாசா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அவர் நேரில் ஆஜராகி நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பார் என அவரது வழக்கறிஞர் அளித்த உறுதிமொழியை ஏற்று, அதுவரை பிடிவாரண்டிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், அவரைக் கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.