சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஜனவரி 22ம் தேதி கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார் என்றார். ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போதைக்கு விடுவிக்கப்படுகிறார்கள். எனினும் மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாண இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி இதுசம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒன்றிய அரசின் வாதத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.