பல்லடம்: பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, தலைமறைவான பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி தமிழ் பேராசிரியராக இருப்பவர் பாலமுருகன். தமிழ்த்துறையில் படித்து வரும் மாணவி ஒருவரை பேராசிரியர் பாலமுருகன் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி, மகளிர் உதவி எண் 181க்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ் பேராசிரியர் பாலமுருகன் மீது புகார் அளித்தனர். இதன்பேரில் அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமறைவான அவரை 3 தனிப்படை அமைத்து பதேடி வந்தனர். இந்த நிலையில் கோவை சுந்தராபுரத்தில் பதுங்கி இருந்த பேராசிரியர் பாலமுருகனை நேற்று போலீசார் கைது செய்தனர்.