சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவனைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். ஆள் கடத்தல், குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஏடிஜிபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. கடத்தப்பட்ட சிறுவனை ஏடிஜிபி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.
நீதிமன்றத்தில் ஆஜரானபோது சீருடையில் சென்ற ஏடிஜிபி ஜெயராம், சாதாரண உடையில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். சிறுவன் கடத்தல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவையடுத்து ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து போலீஸ் அழைத்துச் சென்றது.
சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய் லட்சுமி அளித்த புகாரில் பதிவான முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது. “தனது மூத்த மகன் தனுஷ், சென்னையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். தனது மகனின் திருமணம் தொடர்பான தகவல்களை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி விளக்கமாக கொடுத்தேன்.
கடந்த 7ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தனது இளைய மகனை 5 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் கடத்திச் சென்றனர்; எனது மகன் கடத்தப்பட்டதை அறிந்து உடனடியாக 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தேன்; என் மகனுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயங்களை ஏற்படுத்தி பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர்” தாயார் லட்சுமி புகார் அளித்துள்ளார்.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.