*குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் மனைவி, மாமனார், மாமியாரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பெருமாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (36). இவருக்கு சாயிதா (32) என்ற மனைவியும், அல்ஷிபா (8) என்ற மகளும் உள்ளனர். சாயிதா கடந்த 17ம் தேதி குழந்தையுடன் மாயமாகிவிட்டதாக கணவர் ஹக்கீம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து மாயமான சாயிதா, சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாயிதாவும், அல்ஷிபாவும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்தனர். சாயிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணவர் ஹக்கீம் தன் மீது சந்தேகம் கொள்வதால் அவருடன் வாழ விருப்பமில்லை என்று போலீசாரிடம் சாயிதா தெரிவித்துவிட்டு தனது தந்தை மஜீத்துடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ஹக்கீம் நேற்றிரவு மாமனார் வீட்டிற்கு சென்றார்.
தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் சாயிதா மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஹக்கீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சாயிதா, மாமனார் மஜீத் (72) மற்றும் மாமியார் சமையா (62) ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காட்டூர் ரயில்வே கேட் அருகே ஹக்கீமை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.