கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். மருந்தக உரிமையாளர் சேட்டு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ள ரூ.15,000 வசூல் செய்துள்ளனர். கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ரூ.1 லட்சம் வரை வசூல் செய்தது அம்பலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அருண் மருந்தகம் உள்ளது. இந்த மருந்தின் உரிமையாளர் சேட்டு என்பவர் பி.பார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் இந்த மருந்தகத்தில் ஆன்மை சக்தி பெறவும் குழந்தை பாக்கியம் பெற நாட்டு மருந்து கிடைக்கும் என ஆரம்ப்பித்து தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்தது.
புகாரின் அடிப்படையில் சங்கராபுரம் போலீசார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டபோது அந்த மருந்தகத்தில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யக்கூடிய உபகரணங்களை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் மருந்தகத்தில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இந்த கருக்கலைப்பு செய்வதில் முக்கியமான குற்றவாளியான மருந்தகத்தின் உரிமையாளர் சேட்டு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த விசாரணையில் மருந்தக உரிமையாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என தெரிந்துகொள்வதற்காக ரூ.15000 வசூல் செய்யப்படுவதாகவும் கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய மருந்தகத்தின் உரிமையாளர் சேட்டு ரூ.1 லட்சம் வரை வசூல் செய்தது அம்பலமானது. கடந்த மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபந்தளம் கிராமத்தில் போலி மருத்துவர் சிவானந்தம் (40) என்பவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தார்.