சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்து கிட்டத்தட்ட 2 மாதம் முடியவுள்ள நிலையில் 90 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் குற்ற பத்திரிகையை தயார் செய்யும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் முதலில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டாஸில் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் செல்போன் உரையாடல்கள், சிசிடிவி காட்சிகளின் பதிவுகள், குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்கள் கூறிய வாக்குமூலம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் என பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு தண்டனை பெற்று தரும் விதமாக இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்து வருவதாகவும், கண்டிப்பாக இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.