நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி அருகே விபசார வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் முரளி (33). இவருக்கு சொந்தமான வீடு, ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள சுபாஷ் நகரில் உள்ளது. இந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. இந்த நிலையில் முரளியின் நெருங்கிய நண்பரான திருநெல்வேலி மாவட்டம் தளபதிசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஹரிராம ராஜா என்பவர், தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக நாகர்கோவில் வர வேண்டி உள்ளது.
என்னுடன் உறவினர்களும் வருகிறார்கள். எனவே சில நாட்கள் வீட்டில் தங்க வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து தற்போது ஆள் இல்லாமல் இருக்கும் வீட்டில், தங்கி கொள்ள முரளி அனுமதி கொடுத்துள்ளார். அதன் படி ஹரிராம ராஜா தனது உறவினர்கள் என கூறி சில ஆண்கள், பெண்களை அழைத்து வந்து காட்டி, அந்த வீட்டில் தங்க வைத்துள்ளார். அதன் பின்னர் தான் அந்த வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக முரளிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது, வீட்டில் விபசாரம் நடந்தது தெரிய வந்தது.
அங்கிருந்த 19 வயது இளம்பெண் மற்றும் ஒரு வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இளம்பெண் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அந்த வாலிபர், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஆல்வின் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் இளம்பெண்ணை பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்கப்பட்ட இளம்பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து சென்ற போலீசார், இது தொடர்பாக ஹரி ராம ராஜா, காவல்கிணறு பகுதியை சேர்ந்த சூர்யா, சுசீந்திரம் அக்கறை பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் ஆல்வின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆல்வின் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆரல்வாய்மொழி அருகே வாகன சோதனையின்போது ஹரிராம ராஜா மற்றும் மகேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கைதாகி உள்ள ஹரிராமராஜா முரளியின் நண்பர் ஆவார். இவர் வேலைக்கு எதுவும் செல்ல வில்லை. சில விபசார புரோக்கர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பேரில் வீடுகளை வாடகை பிடித்து கொடுத்து அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். கைதாகி உள்ள மகேஷ், சிறிய அளவில் பர்னிச்சர் கடை நடத்தி உள்ளார். ஆனால் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இளம்பெண்களை வேலைக்காக வரவழைத்து, அவர்களை தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வெளி மாவட்ட புரோக்கர்களும் இவர்களுடன் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டு, யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது பற்றி விசாரிக்கப்படும் என்றனர்.