நெல்லை: கடந்த 2004ம் ஆண்டு வெளியான கம்பீரம் என்ற தமிழ் திரைப்படத்தில் போலீசாக நடித்திருக்கும் வடிவேலு கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்ய செல்வார். அப்போது அந்தப் பெண் வீட்டை பூட்டி விட்டு நிர்வாணமாக நின்று போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிச் செல்வார். இதே போல் மணல் கொள்ளை வழக்கில் ஒருவர் நெல்லை மாவட்ட போலீசாரிடமிருந்து தப்ப முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி விஜயநாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் பொக்லைன் இயந்திரம், பைக் ஆகியவற்றை அப்படியே விட்டு விட்டு தப்பினர். இதுதொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த கங்கை ஆதித்தன் (49) உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் கங்கை ஆதித்தன் அவரது வீட்டில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் கதவை தட்டியபோது, கங்கை ஆதித்தனின் மனைவி கதவை திறந்தார். கணவர் கைதாவதை தடுக்க அவர் போலீசாரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கிடையே போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த கங்கை ஆதித்தன் அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பதுங்கினார். இதனால் மணல் கொள்ளையனை கைது செய்ய முடியாமல் 4 மணி நேரம் போலீசார் திணறினர். இதையடுத்து கங்கை ஆதித்தனை கைது செய்ய கதவை போலீசார் உடைத்தனர். அப்போது கங்கை ஆதித்தன் தான் நிர்வாணமாக நின்றால் போலீசார் கூச்சப்பட்டு வரமாட்டார்கள். அதனால் தப்பிவிடலாம் என எண்ணி ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் பின்வாங்காமல் கங்கை ஆதித்தனை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் கங்கை ஆதித்தன் மீது போர்வையை போட்டு மூடி போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர்.