புதுடெல்லி: அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 1,000 கோடி பேர் பயணிக்கும் வகையில் ரயில்வே விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். டெல்லி ரயில் பவனில் நிருபர்களிடம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘தற்போது ஆண்டுக்கு சுமார் 800 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இந்தத் திறனை 1,000 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக மேலும் மூவாயிரம் ரயில்கள் தேவை. இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களை இயக்க முடியும்.
தொலைதூர வழித்தட ரயில்களை விரைவுபடுத்த வேண்டும். ரயில்வேயின் திறனை மேலும் அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்தாயிரம் கிலோமீட்டர் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பல இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 1,002 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை கட்டியுள்ளோம்.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 1,200 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம்’ என்றார். முன்னதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வடமாநில பண்டிகைக் காலத்தில் இயக்கப்படும் ரயில்கள், டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது பயணிகள் ரயிலில் சக பயணிகளிடம் பயண வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.