*கலெக்டர், எஸ்.பி. எச்சரிக்கை
நாகர்கோவில் : 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால், குமரி மாவட்டத்தில் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம். மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர், எஸ்.பி. எச்சரித்துள்ளனர்.கேரளாவில் தென் மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. நகர பகுதிகள் மட்டுமின்றி, மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (11ம் தேதி) ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இரவு 11.30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆழமான அதிக தாக்கத்துடன் தொடர்புடைய கடல் சீற்றங்கள் மற்றும் கொந்தளிப்பான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றத்துடன் கூடிய அலைகள் எழும்பும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இன்று (11ம்தேதி) கடற்கரை அருகில் உள்ள பகுதிகளில் பொழுதுபோக்கிற்கான செயல்பாடுகளை நிறுத்துதல் வேண்டும். பலத்த காற்று காரணமாக கடலில் திடீரென சீற்றம் காணப்படும். எந்த வித அறிகுறிகளும், எச்சரிக்கையும் இன்றி திடீரென கடல் சீற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கடல் சீற்றத்தில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இருக்க உரிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கடல் சேவை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி மாவட்டத்தில் ஜூன் 10, 11 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதுடன் கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்களும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறி உள்ளார்.
குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் இன்று (11ம்தேதி) இரவு வரை கடல் அலைகள் 2.6 மீட்டர் உயரம் வரை எழும்ப வாய்ப்பு உள்ளதாகவும, மேலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள், கடலோர பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தடையை மீறி கடலோர பகுதிகளுக்கு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
கடலோர பகுதியில் போலீஸ் குவிப்பு
கடலோர பகுதிகளில் நேற்று மாலையில் இருந்தே போலீசார் குவிக்கப்பட்டனர். கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சொத்தவிளை, சங்குதுறை, முட்டம், லெமூரியா பீச், தேங்காப்பட்டணம், குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். முக்கிய கடலோர சுற்றுலா தலங்கள் இன்று சீல் வைக்கப்படுகின்றன. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் எஸ்.பி., சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து நிகழ்ந்த உயிர் பலி
கடந்த மே முதல் வாரத்திலும் தெற்கு இந்தியப் பெருங்கடலில் ஆழமான அதிக தாக்கத்துடன் தொடர்புடைய கடல் சீற்றங்கள் மற்றும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து குமரி கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.சுற்றுலா பயணிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கடலுக்கு சென்றனர். இதனால் உயிர் பலிகளும் நிகழ்ந்தன. நாகர்கோவில் அருகே உள்ள லெமூரியா பீச் வந்த பயிற்சி டாக்டர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
குளச்சல் கடலில் சென்னையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். தேங்காப்பட்டணம் கடலில் புதுக்கடை பகுதியை சேர்ந்த சிறுமி உயிரிழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்ைத ஏற்படுத்தின. இந்த முறை அது போன்ற நிகழ்வுகள் நிகழாத வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளன. தடையை மீறி செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
‘கள்ளக்கடல்’ என்பது என்ன?
கடல் அலைகள் நீர்மட்டம் திடீரென்று உயர்ந்து எந்தவித இரைச்சலும் இல்லாமல் கரை பகுதியில் நுழைவது ‘கள்ளக்கடல்’ ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் வீசுகின்ற சூறாவளி மற்றும் பலத்த கடற்காற்று காரணமாக ஏற்படுகின்ற ஆற்றலால் கடல் அலைகள் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து கரை நோக்கி உயர்ந்து வருகிறது.
இதுவே ‘கள்ளக்கடல்’ என்று அழைக்கப்படுகிறது. கரை பகுதிகளில் வருகின்ற இந்த அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. குமரி மாவட்டத்தில் அழிக்கால் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் அவ்வப்போது கள்ளக்கடல் அலைகளால் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் அழிக்கால் அருகேயுள்ள கணபதிபுரம் லெமூர் கடற்கரை பகுதியில் இவ்வாறு கள்ளக்கடல் அலையில் சிக்கிய மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து 8 பேர் அப்போது கடல் அலையில் சிக்கி பலியாகி இருந்தனர்.