கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் கேட்டதால் விமான நிறுவன ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: ராணுவ அதிகாரி மீது வழக்குபதிவு
புதுடெல்லி: கடந்த மாதம் 26ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிக்க மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் பெட்டியுடன் வந்தார். அவர் கொண்டு வந்த பெட்டியின் 16 கிலோ இருந்தது. டிக்கெட் விதிமுறைப்படி அனுமதிக்கப்பட்ட பெட்டி எடை 7 கிலோ மட்டுமே. இதனால் கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துமாறு விமான நிறுவன ஊழியர்கள் கூறி உள்ளனர். அதற்கு கட்டணம் செலுத்த மறுத்த ராணுவ அதிகாரி, பாதுகாப்பு நடைமுறைகளை முடிக்காமல் விமானத்தை நோக்கி செல்ல முயன்றார். இதனால் விமான நிறுவன ஊழியர்கள் தடுத்ததால் அவர்களை ராணுவ அதிகாரி கடுமையாக தாக்கினார். ஊழியர்களின் முகத்தில் மாறி மாறி குத்து விட்ட அதிகாரி, அவர்களை காலால் உதைத்தார்.
இதில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர். ஒருவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 4 ஊழியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், தங்கள் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் குறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, பயணி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஸ்பைஸ்ஜெட் கோரியுள்ளது. விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி பயணியை பறக்க தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது.


