புதுடெல்லி: பாகிஸ்தான் தனது ராணுவ தலைமையகத்தையே இடமாற்றினாலும் இந்திய ராணுவத்தின் ரேடாரில் இருந்து தப்ப முடியாது என்று வான் பாதுகாப்பு இயக்குனர் பேட்டியளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் எல்லையில் நிலைமை ஓரளவு அமைதி திரும்பி வரும் நிலையில், இந்திய ராணுவ வான் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் ராணுவத்தின் பொதுத் தலைமையகம் ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டாலும் கூட, அவர்களால் இந்திய ராணுவத்தின் ரேடாரில் இருந்து தப்ப முடியாது.
முழு பாகிஸ்தானும் இந்தியாவின் கண்காணிப்பு எல்லைக்குள் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்கள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கியது. இதற்காக உயர்ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன உள்நாட்டு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது நவீன போர் யுக்தியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் உயர்ரக தொழில்நுட்பங்கள் அதன் சிறப்பை நிரூபித்துள்ளன. பல்வேறு ராணுவப் பிரிவுகளுக்கு இடையே சீரான ஒருங்கிணைப்பை உறுதி செய்ய ராணுவ அதிகாரிகள் பணியாற்றினர். தீவிரவாதத்திற்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் திறன் இந்திய ராணுவத்திடம் இருப்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. எனவே பாகிஸ்தானின் அனைத்து இலக்குகளையும் தாக்கும் உயர் ரக ஆயுதங்கள் இந்தியாவிடம் உள்ளது. நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதே ராணுவத்தின் முதன்மையான கடமையாகும்.