புதுடெல்லி: அனைத்து பிராந்தியத்திற்கும் ஏற்ற ராணுவ ரோந்து வாகனம் மற்றும் கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கான பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது.
வடக்கு எல்லையில் அனைத்து விதமான பிராந்தியத்திலும், சாலைகளே இல்லாத கரடுமுரடான பகுதியிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளும் வகையிலான ரோந்து வாகனமும், மேற்கு எல்லையில் சமவெளி மற்றும் பாலைவனப் பகுதியிலும், 4,500 மீட்டர் உயரமான பிரதேசங்களிலும், மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் வகையிலான ஹெலிகாப்டர்களையும் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணியாக தகுதிவாய்ந்த இந்திய நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதில் ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கான தகுதி மற்றும் சேவையை கொண்டிருப்பது குறித்த விவரங்களை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, தகுதியான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.