பொன்னேரி: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி நிலம் பொன்னேரி அருகே ஒரக்காட்டில் மீட்கப்பட்டது. நிலத்தகராறில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து கொலைக்கான விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் உள்ள பொன்வண்டு சோப்பு நிறுவன இடத்தை அதிகாரிகள் மீட்டனர். பொன்வண்டு நிறுவனத்தின் 14.5 ஏக்கர் நிலத்தை கைமாற்றி விடுவதில் ஆம்ஸ்ட்ராங் – ரவுடி நாகேந்திரன் இடையே மோதல் ஏற்பட்டது. ரூ. 150 கோடி மதிப்பு நிலம் தொடர்பான மோதலே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அரசு நிலமான அந்த 14.5 ஏக்கர் நிலத்தை பொன்வண்டு நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் நிலத்தை மீட்டனர். அரசு இடத்தை ஆக்கிரமித்து செயல்பட்ட பொன்வண்டு நிறுவனத்தின் கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டுள்ளது.