சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த அன்றே போலீசார் 8 பேரை பிடித்தனர். இதில் திருவிக நகர் காவல் நிலையத்தில் ஏ கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ள பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3வது தெருவை சேர்ந்த திருமலை (45) என்பவரும் ஒருவர்.
இவர் சம்பவத்தன்று ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகில் ஆட்டோவில் அமர்ந்து தனது கூட்டாளிகளை வரவழைத்தவர். பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருமலைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் திருமலைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.