பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா (எ) கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு சென்னை மாநகர கமிஷனர் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அருண் பதவியேற்றார். இதையடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாகேந்திரனின் வீடுகளில் சோதனை நடத்தி 50க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களது உறவினர்கள் 7 பேர், நாகேந்திரனின் 2வது மகன் அஜித்ராஜ், நாகேந்திரன் பெயரை பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஆனந்தன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையெடாட்டி எந்த ஒரு குற்ற செயல்களும் நிகழாமல் தடுக்க சென்னை மாநகர கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு மற்றும் கொளத்தூர் காவல் மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களாகவே புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு, ரவுடிகள் டிரைவ் என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூரில் மினி கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 5 இடங்களில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8 இடங்களில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர இருசக்கர வாகனங்களில் தீவிர ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது. பழிக்குப்பழி சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள், நெருங்கிய நட்பு வட்டாரங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் உறவினர்களையும் ஆதரவாளர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர் என அறியப்பட்ட பிரபல ரவுடி ஒற்றைக்கண் ஜெயபாலு என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் புளியந்தோப்பு சரக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
*விரைவில் பழிக்குப்பழி என பதிவிட்ட வாலிபர் கைது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவேன். அண்ணனை கொலை செய்தவனை கண்டுபிடித்து குடலை உருவி விடுவேன், தலைமை தடுத்தாலும் விடமாட்டேன் என்று ஒருவர் பதிவு செய்துள்ளதாக ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த இன்ஸ்டாகிராம் பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திருமழிசை பஜனை கோயில் தெருவை சேர்ந்த மனோஜ் (20) என்பவர் இவ்வாறு பதிவிட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.
*நாகேந்திரனின் கூட்டாளி கைது எருக்கஞ்சேரியை சேர்ந்த குமார் (42), நேற்று காலை எருக்கஞ்சேரி வழியாக நடந்து சென்றபோது இவரை வழிமடக்கிய மர்ம நபர் ஒருவர் 1600 ரூபாயை பறித்து சென்றார். புகாரின்பேரில், கொடுங்கையூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (43) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட 13 குற்ற வழக்குகள் உள்ளன.