சென்னை: புதிய குற்றவியல் சட்டத்தின்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் சென்னை போலீஸார் இறங்கி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ‘பி.என்.எஸ்.107’ சட்டப் பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்து வந்த இந்த அதிகாரம் புதிய சட்டப் பிரிவின் கீழ் போலீசாருக்கும் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த சட்டத்தை பயன்படுத்தி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையள்ளவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் செம்பியம் போலீசார் இறங்கி உள்ளனர்.