* தனது 5 சவரன் நகைகளை அடமானம் வைத்து கூலிப்படைக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்தது அம்பலம்
* வெடிகுண்டை கைமாற்றிய இருவர் உள்பட 6 பேருக்கு போலீஸ் வலை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளநிலையில், கூலிப்படைக்கு பண உதவி செய்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை நேற்று போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பட்டினம்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பர் மாதுவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கொலை செய்யப்பட்டார்.
இதில் கூலிப்படையை சேர்ந்த நபர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் நிதி உதவி செய்தார் என ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர். இதனால், அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில், ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 10 பேர் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலுவுடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு எதிரிக்கு எதிரி நண்பன் என பல ரவுடி கும்பல்கள் ஒன்று சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் வரை கைது படலம் நீண்டது. ஆற்காடு சுரேஷ், போலீசாரின் தொடர் நெருக்கடி காரணமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆந்திராவில் பதுங்கி இருந்தபடியே தனது ஆட்கள் மூலம் சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அதற்கு முந்தைய காலகட்டத்திலும் சென்னையில் ஏதாவது ஒரு குற்ற செயல்களை செய்து விட்டு ஆந்திராவிற்கு சென்று பதுங்குவதை ஆற்காடு சுரேஷ் வழக்கமாக கொண்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு ஆற்காடு சுரேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர கிராமங்களில் பதுங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் ஆற்காடு சுரேஷுக்கு நினைவஞ்சலி செலுத்த, சொந்த ஊரான ஆற்காடு அடுத்த பொன்னை கிராமத்துக்கு ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் வருவார்கள் என்பதால் தனிப்படை போலீசார் ஆந்திர எல்லையோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி போலீசாரிடம் சிக்கினார். அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தனது 5 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ஆற்காடு சுரேஷின் தம்பியும், தனது மைத்துனருமான பொன்னை பாலுவிடம் ரூ.1.5 லட்சம் கொடுத்துள்ளார். இதை கூலிப்படைக்கு கொடுத்து, கொலைக்கான ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிங்க.
பிறகு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன், என கூறியது தெரிந்தது.முன்னதாக, பொன்னை பாலுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, இதே தகவலை தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது பொற்கொடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவேன் என பொற்கொடி ஏற்கனவே சபதம் எடுத்திருந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார் என பொற்கொடிக்கு தெரியும். யாரெல்லாம் அவரை தொடர்பு கொண்டு பேசினர் உள்ளிட்ட பல விவரங்களை போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்தனர். இதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொற்கொடி பண உதவி செய்ததும், பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட நபர்களிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டதும் தெரிந்தது.
இதையடுத்து, பொற்கொடி மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24வது நபராக அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி, புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். தனிப்படை போலீசார் சம்பவ செந்தில், சீசிங் ராஜா, மொட்ட கிருஷ்ணா, ராஜேஷ் மற்றும் வெடிகுண்டை கைமாற்றிய இருவர் என 6 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.