பூந்தமல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தாமஸ் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஜெகதீஷ், துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் துணைப் பொதுச் செயலாளர் காமராஜ், மாநில வழக்கறிஞரணி பொதுச் செயலாளர் ஸ்ரீதர், பி.சைமன் பாபு ஆகியோர் பேசினர்.
முன்னதாக பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வக்கீல்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வக்கீல்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.