சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்பவ செந்தில் குறித்து வெளிநாட்டில் உள்ள அவரது முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ செந்திலின் புதிய புகைப்படங்களையும் கேட்டு வாங்கி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய ரவுடிகளான சம்பவ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 10 வருடங்களாக சம்பவ செந்தில் தலைமறைவாக இருந்து வருவதால், 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்ததால் தற்போதைய உருவம் தெரியாமல் அவரை நெருங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ரவுடி சம்பவ செந்திலின் தற்போதைய உருவம் குறித்தான புகைப்படத்தை தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவ செந்திலின் முன்னாள் மனைவியிடம் இருந்து தனிப்படை போலீசார் புகைப்படத்தை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் செயலி மூலமாக (ஆர்குட் செயலி) சம்பவ செந்திலுடன் பழக்கம் ஏற்பட்டு பெண் ஒருவர் அவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பவ செந்தில் அவ்வப்போது அவரது முன்னாள் மனைவியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. சென்னை இசிஆர் பகுதியில் வசித்து வந்த அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது.
அவரிடம் இருந்து சம்பவ செந்திலின் சில புதிய புகைப்படத்தை போலீசார் பெற்று அதை வைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சம்பவ செந்தில் மீது போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சர்வதேச போலீசாரின் ஒத்துழைப்போடு அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்த முக்கிய ரவுடி புதூர் அப்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். புதூர் அப்பு மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.